
வாஷிங்டன், ஜூன் 25:
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயலுமான A.R.ரஹ்மான் , அமெரிக்காவின் உயரிய கோல்டன் பிளேட் (Golden Plate Award) விருதைப் பெற்று மேலும் ஒரு சர்வதேச சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற American Academy of Achievement அமைப்பின் 56-வது சர்வதேச மாநாட்டில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவித்து வரும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட் என்ற இலாப நோக்கற்ற உலகளாவிய அறக்கட்டளை இந்த விருதை வழங்கியது. நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற நியூசிலாந்து திரைப்பட இயக்குநரான பீட்டர் ஜாக்சன், தி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரின் இயக்குநர், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேடையில் விருதை வழங்கி கௌரவித்தார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இசைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆற்றி வரும் உலகளாவிய சாதனைகள், புதுமையான படைப்புகள் மற்றும் மனிதநேயப் பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், வணிகம் மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட துறைகளில் உலகளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த ஆளுமைகளுக்கு கோல்டன் பிளேட் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்ற பின்னர் தனது சமூக வலைதளப் பதிவுகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான், இந்த அங்கீகாரம் தமக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மக்கள், இந்திய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வழங்கிய அன்பும் ஆதரவுமே இந்த விருதிற்கான முக்கிய காரணம் என்றும், சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு ஆஸ்கர், இரண்டு கிராமி, பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைப் பயணத்தில், கோல்டன் பிளேட் விருது மற்றொரு முக்கிய மைல்கல்லாக இணைந்துள்ளது.