தி நியூ காலேஜ் – இந்திய மாங்குரோவ் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்; மாங்குரோவ் காடுகள் மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை : ராயப்பேட்டை பீட்டர் சாலையில் அமைந்துள்ள தன்னாட்சி கல்வி நிறுவனமான தி நியூ காலேஜ் தாவரவியல் முதுகலைத் துறைக்கும், திருவள்ளூர் மாவட்டம் புலிக்காட்டில் செயல்பட்டு வரும் Mangrove Foundation of India (MFI) – இந்திய மாங்குரோவ் அறக்கட்டளைக்கும் இடையே கல்வி மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

கல்லூரியின் முதன்மை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.அஸ்ரர் ஷெரீப், துணை முதல்வர் (நிர்வாகம்) டாக்டர் ஏ.ஹைதர் அலி, ஷிப்ட்-II கல்விப் பிரிவு துணை முதல்வர் டாக்டர் சையத் அப்துல் ஹமீத் மற்றும் தாவரவியல் துறைத் தலைவர் டாக்டர் அம்சாத் பாஷா கோலார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய மாங்குரோவ் அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான எஸ்.மீராசா, செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தி நியூ காலேஜ் தாவரவியல் முதுகலைத் துறையும் MFI-யும் இணைந்து “வேர்களுக்குப் புத்துயிர் அளித்தல் – சதுப்புநிலச் சூழல் மண்டல மறுசீரமைப்பில் சமூகங்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு விரிவுரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

MIIT அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.அஸ்ரர் ஷெரீப், துணை முதல்வர் (நிர்வாகம்) டாக்டர் ஏ.ஹைதர் அலி மற்றும் ஷிப்ட்-I கல்விப் பிரிவு துணை முதல்வர் டாக்டர் சையத் அப்துல் ஹமீத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தாவரவியல் துறைத் தலைவர் டாக்டர் அம்சாத் பாஷா கோலார் வரவேற்புரையாற்றினார்.

MFI நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான எஸ்.மீராசா மற்றும் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு வளவாளர்களாகக் கலந்து கொண்டு, மாங்குரோவ் காடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், கடற்கரை கிராமங்கள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் அவற்றின் பங்கு, கடலோரச் சூழலியல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

மேலும், மாங்குரோவ் சூழல் மண்டலங்களை மறுசீரமைப்பதில் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பு மற்றும் சமூக அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு, கடலோரச் சூழலியல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டுச் செயலாளர்கள் டாக்டர் எம்.ஷேக் நூர் முகமது, டாக்டர் ஏ.முகமது நியாஸ் மற்றும் தாவரவியல் துறைச் செயலாளர் டி.அரவிந்த் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் தாவரவியல் துறை மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பை ஒருங்கிணைத்து, மாங்குரோவ் காடுகள் மற்றும் கடலோரச் சூழலியல் பாதுகாப்பில் மாணவர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இக்கூட்டாண்மை அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *