
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21:
மலேசியா முழுவதும் அடுத்த மாதம் (ஜூலை) முதல் அனைத்து மலேசிய குடிமக்களும் ஒரு லிட்டர் டீசலை 2.10 ரிங்கிட் என்ற சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்நாட்டு நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள இந்த டீசல் மானியத் திட்டம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘புடி மதானி’ திட்டத்தைப் போலவே ‘மைக்காட்’ அடிப்படையில் செயல்படுத்தப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மலேசியர்கள் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரே விலையிலும், ஒரே நடைமுறையிலும் டீசலைப் பெற்றுப் பயனடைய முடியும். ‘மைக்காட்’ அடையாள அட்டை சரிபார்ப்பு முறையின் மூலம் மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வெளிநாட்டினருக்கும் மானியத்திற்குத் தகுதி பெறாத நபர்களுக்கும் டீசல் மானியமில்லாத சந்தை விலையிலேயே விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சகம் விளக்கியுள்ளது.
தற்போது தீபகற்ப மலேசியாவில் மானியமில்லாத டீசலின் விலை லிட்டருக்கு 4.37 ரிங்கிட் ஆக உள்ளது. அதேவேளையில், சாபா மற்றும் சரவாக் மாநிலங்களில் டீசல் லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய டீசல் மானியத் திட்டத்தின் செயல்முறை மற்றும் அமலாக்கம் தொடர்பான விரிவான விவரங்களை மலேசியாவின் இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான், ஜூன் 22-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கை, எரிபொருள் செலவினச் சுமையை குறைப்பதுடன், மானியப் பலன்கள் நேரடியாக தகுதியுடைய குடிமக்களை சென்றடைவதை உறுதிப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.