இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு!

புதுதில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தொடர்ந்து பாடப்பட்டு வருவதாகவும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் முதலாவதாகப் பாடப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலை பாடுவதற்கு உள்துறை அமைச்சகம் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) கடந்த சில ஆண்டுகளாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக வான்வழி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜை நடத்தவுள்ளதாக அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணானது என்றும், இது தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர்வள ஆணையத்திற்கும் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளதுடன், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *