பத்திரிகையாளர் எதிரொலி: மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் பாராட்டு!

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள VMS நகர், பெரிய பள்ளிவாசல் குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்களில் பழுது ஏற்பட்டிருந்தது. மேலும், உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் இணைக்கப்பட்டிருந்த மின் ஒயர்கள் அறுந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலமுறை மாங்காடு – பட்டூர் மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. எனினும், நீண்ட நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 23/05/2026 சனிக்கிழமை நடைபெற்ற “மார்னிங் டைம்ஸ்” பத்திரிகையின் ஆலோசனை கூட்டத்தில், மாங்காடு செய்தியாளர் சுலைமான் தனது பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மின்சார பிரச்னைகள் குறித்து பத்திரிகை தலைமை ஆசிரியரிடம் எடுத்துரைத்தார். அப்பகுதியில் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் ஆலோசனைபடி, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆசிரியர் முஹம்மது ரவூப் வலியுறுத்தினார். மேலும், மாங்காடு செய்தியாளர் மூலம் சம்பவ இடத்தின் புகைப்படங்கள் பெறப்பட்டு, உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகளின் உத்தரவின்படி பட்டூர் பகுதி மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், பழுதடைந்து உடைந்திருந்த மின் உபகரணங்கள் மாற்றப்பட்டு, அறுந்திருந்த மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டன.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்க காரணமான பத்திரிகையாளர்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *