
ஆன்மீக உபதேசங்களை உலகெங்கும் பரப்ப ‘Faizee Sarkar App’ அறிமுகம் – புதிய நூல்கள் வெளியீடு
சென்னை, ஜூலை 15:
தென்னகத்து ஞானச் சூரியன், அல்லாமாஅல் ஆரிஃப் பில்லாஹ், ஜாமியுஷ் ஷரீஅத் வத் தரீகத், ஷம்சுல் ஆரிஃபீன் அபுல் பயான் க்வாஜா தில் நவாஸ் பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் நூற்றாண்டு விழா (1926–2026), கடந்த ஜூலை 11-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பைஜ் மஹாலில் ஒருநாள் நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெற்றது.
மனிதனை இறைவழியில் நடத்தி, உயர்ந்த ஒழுக்கநெறிகளையும் இறையறிவையும் போதித்து, ஆயிரக்கணக்கான சீடர்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும் ஆன்மிகப் பேரொளியாக விளங்கிய பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் திரளான ஆன்மிக அன்பர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மஹானின் சேவைகளையும் உபதேசங்களையும் நினைவுகூர்ந்தனர்.
நிகழ்வில் பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் நெருங்கிய சீடர்கள், ஆன்மிக வழிகாட்டிகள் மற்றும் உலமாப் பெருமக்கள் உரையாற்றினர். மஹானவர்களின் எளிமையான வாழ்க்கை, பணிவு, இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்ந்த விதம், ஏழை–எளியோர் மீது கொண்ட அளவற்ற கருணை, சமய நல்லிணக்கத்தைப் பேணிய அணுகுமுறை, மனிதநேயச் சிந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை அவர்கள் எடுத்துரைத்து, சீடர்களுடன் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் சீடரும் சிறந்த எழுத்தாளருமான கும்பகோணம் மௌலவி அபுதாஹிர் ஃபைஜி பாகவி எழுதிய “ஃபைஜி நாயகம் பேசுகிறார்கள்” என்ற நூலும், சீரிய சிந்தனை எழுத்தாளர் நாகை நூருல் அமீன் ஃபைஜி எழுதிய “தன்னை அறிதல்” என்ற நூலும் மஹானவர்களின் அருந்தவப் புதல்வர்களால் வெளியிடப்பட்டன.
மேலும், மஹானவர்களின் உயர்ந்த உபதேசங்களையும் ஆன்மிக வழிகாட்டுதல்களையும் உலகம் முழுவதும் உள்ள சீடர்கள் தொடர்ந்து எளிதாகப் பெறும் வகையில் “Faizee Sarkar App” என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் மூத்த புதல்வரும் சஜ்ஜாதா நஷீனுமான பைஜானுல்லாஷாஹ் பைஜி ஹழ்ரத் தலைமை வகித்தார். அவர்களுடன் சஜ்ஜாதா இர்பானுல்லாஷாஹ் பைஜி ஹழ்ரத், சஜ்ஜாதா நூரானிஷாஹ் பைஜி ஹழ்ரத் மற்றும் குடும்பத்தினரும் முன்னிலை வகித்தனர்.
ஸில்ஸிலாயே ஆமிரிய்யாவின் சஜ்ஜாதா நஷீன் பீர் ரஜாவுல் ஹக் அலீமிஷாஹ் ஆமிரி ஹழ்ரத் அவர்கள் நூற்றாண்டு சிறப்புரையாற்றி, பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் ஆன்மிகப் பணிகள், சமூகச் சேவைகள் மற்றும் தலைமுறைகளை வழிநடத்தும் அவர்களின் சிந்தனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் டாக்டர் வி.எஸ்.அன்வர் பாதுஷா உலவி ஹழ்ரத், பாலவாக்கம் மஸ்ஜிதே மஹ்மூது தலைமை இமாம் ஏ.யூ.அபூபக்ர் உஸ்மானி ஹழ்ரத், ஃகைருல் பரிய்யா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத், வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் அல்ஹாஜ் இறையன்பன் குத்தூஸ் பைஜி மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆன்மிகப் பாடகர் ஏ.ஜைனுல் ஆபிதீன் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி அமீரகம், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மார்க்க அறிஞர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஏராளமான சீடர்கள், ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டு மஹானவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், பைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்களின் ஆன்மிகப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் உறுதிமொழியுடன் சிறப்பு துஆ நடத்தப்பட்டு, பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.