
சென்னை, ஜூன் 5:
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “இயற்கையால் ஊக்கமடைந்து, காலநிலைக்காக, நம் எதிர்காலத்திற்காக” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை (05.06.2026) சிறப்பாக நடத்தின.
அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமத்தின் நிறுவனர் தலைவர், காமராசர் விருதாளர் டாக்டர் ச.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர் மற்றும் தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செல்வி எஸ்.கீர்த்தனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் கூட்டுப்பொறுப்பு குறித்து உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அருள்பிரகாசம் மற்றும் பின்னணிப் பாடகி, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர் ஆகியோர், மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தூதுவர்களாக செயல்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஈஷா அறக்கட்டளையின் மரம் நடும் இயக்கத்தின் கீழ் இதுவரை 13.4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் 1.2 கோடி மரங்களை நடும் இலக்கை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து 100 மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வில் அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமத்தின் துணை நிறுவனர், நல்லாசிரியர் விருதாளர் டாக்டர் டெல்பின் தேவராஜ், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 2,500 மரக்கன்றுகள் நடுதல், பனை விதைகள் மற்றும் விதைப்பந்துகள் பரப்புதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பணிகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்ற செயலர் முனைவர் தே.தேவ் ஆனந்த், தன்னம்பிக்கைப் பேச்சாளரும் இணைச்செயலருமான டாக்டர் ஸ்ரீதேவி தேவ் ஆனந்த் ஆகியோர் உடனிருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மேலும், ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வலர்களான நடிகை சுஹாசினி மணிரத்னம், லேன்சன் டொயட்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லங்கா லிங்கம், வானொலி தொகுப்பாளர் சிவசங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களின் பங்களிப்பு நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்ததுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே வலுப்படுத்தியது.
கல்லூரி முதல்வர் முனைவர் வே.ராதிகா, துணை முதல்வர் பி.மல்லிகா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செல்வி அர்ச்சனா தேவி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்தை சிறப்பித்தனர்.