
பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் குர்கரன் சிங், புதிதாக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 20 முதல் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும், National Disaster Response Force (NDRF), உள்ளூர் காவல்துறை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின் ஒரு பகுதியாக, ஆழ்துளைக் கிணற்றின் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் புதிய குழி தோண்டப்பட்டு, குழந்தையின் அசைவுகளை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியிருந்த சிறுவனுக்கு தொடர்ந்து குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டதுடன், கேமராக்கள் மூலம் அவனது உடல்நிலை மற்றும் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது.
சுமார் 9 மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் சிறுவனை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் உடனடியாக மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெற்றிகரமான மீட்புப் பணி, மீட்புக் குழுவினரின் துரித செயல்பாடுக்கும் ஒருங்கிணைந்த முயற்சிக்கும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.