ஜப்பான் நாட்டிற்கு செல்லும் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

சென்னை, மே 22: ஜப்பான் நாட்டின் “சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்றத் திட்டம் – 2026” (Sakura High School Programme) மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் திறமையான பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்ற பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்:

🔸செங்கல்பட்டு மறைமலைநகர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.லக்ஷிதா,

🔸ஈரோடு கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா,

🔸தூத்துக்குடி வேப்பலோடை அரசு மாதிரி பள்ளி மாணவன் ரோஹித் குமரன்,

🔸நீலகிரி கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.அர்னால்டு ஜாக் ஆலிவர் ஆகியோர் ஆவர்.

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (JST) சார்பில் நடைபெறும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களை, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டி, இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்கண்ட 4 மாணவர்களுடன் ராமநாதபுரம் எமனேஸ்வரம் எஸ்.என்.வி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மேற்பார்வையாளர் என்.மாலை ஈஸ்வரியும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.00 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி வழியாக ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் பயணத்தை நிறைவு செய்து வரும் 31.05.2026 அன்று சென்னை திரும்ப உள்ளனர்.

ஜப்பானில் உள்ள மேம்பட்ட அறிவியல் வளர்ச்சி, அதிநவீன தொழில்நுட்பங்கள், சிறப்பான கல்வி முறை மற்றும் கலாச்சார அனுபவங்களை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து இத்தகைய சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டங்களில் சிறப்பாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் மாணவர்களின் அறிவியல் ஆர்வம், புதுமைத்திறன் மற்றும் உலகளாவிய பார்வையை மேம்படுத்தும் வகையில் அமையும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திர மோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *