சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களை அமர்ந்துதான் பேச வைக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் நிற்க வைத்து பேசக் கூடாது என்றும், அவர்களை நாற்காலியில் அமரவைத்து தான் அதிகாரிகள் பேச வேண்டும் என்றும் தமிழ்நாடு பதிவுத்துறைத் தலைவர் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

*முக்கிய உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள்:*

சார் பதிவாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களின் மேஜை முன்பாக பொதுமக்களுக்காக குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுடன் அலுவலகங்களுக்கு வரும்போது, அவர்களை நிற்க வைத்தபடி அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அலுவலகத்திற்கு வரும் அனைவரும் அமரும் வகையில் போதுமான இருக்கைகள் உள்ளதை மாவட்ட பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், சில அலுவலகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாதது CCTV ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் CCTV கேமராக்கள் வழியாக இந்த நடைமுறை நேரடியாக கண்காணிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மொத்தம் 587 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *