ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் – 15,058 மின் பணியாளர்கள் நியமனம்: முதலமைச்சர் உத்தரவு

சென்னை, ஜூன் 16:
தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், மின் பழுதுகளை விரைந்து சரிசெய்வதற்காக 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், மின்சார வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து, மின் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கும், தேவையான மின் பணியாளர்களை விரைவாக நியமிப்பதற்கும் உத்தரவிடப்பட்டது.


மேலும், மின் ஊழியர்களை தொடர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும், சென்னையில் செயல்பட்டு வரும் 125 ரோந்து குழுக்களை சுழற்சி முறையில் அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் பழுதுகளை தாமதமின்றி சரிசெய்ய தேவையான மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *