
சென்னை: பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகளை விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணும் நோக்கில், இனி வாரத்தில் 2 நாட்கள் குறைதீர் முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளுக்கு விரைவான தீர்வு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில், பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். இந்த இரு நாட்களும் மக்கள் குறைதீர்ப்பு நாட்களாக கருதப்பட வேண்டும்.
டிஎஸ்பிக்கள், எஸ்பிக்கள், டிஐஜிக்கள் மற்றும் ஐஜிக்கள், அந்தந்த காவல் ஆணையர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தங்களது அலுவலகங்களில் இருந்து பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் தெரிவிக்கும் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உடனடியாக தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நீதிமன்ற அலுவல், கூட்டங்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பின், பொதுமக்களை நீண்ட நேரம் காக்கவைக்காமல் தங்களுக்கு அடுத்த நிலை அதிகாரி மூலம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அதிகாரிகளின் செயல்பாடுகள் மூலம் தலைமை காவல்துறை அலுவலகத்தால் கண்காணிக்கப்படும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.