
சென்னை: தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகவும் (DGP & Head of Police Force) மகேஷ் குமார் அகர்வால் IPS அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிரடி உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தற்காலிகமாக டிஜிபி பொறுப்பை வகித்திருந்த சந்தீப் ராய் ரத்தோர் அவர்களுக்கு பதிலாக, தற்போது முழுநேர காவல்துறைத் தலைவராக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், தனது தந்தையின் வழியில் சட்டப்படிப்பை முடித்தவர். வெறும் 22 வயதிலேயே, 1994ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய காவல் பணியில் (IPS) இணைந்தார்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பிரிவுகளில் நீண்ட கால அனுபவம் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
அவர் வகித்த முக்கிய பொறுப்புகள் வருமாறு:
🔹சென்னை மாநகர காவல் ஆணையர்
🔹மதுரை மாநகர காவல் ஆணையர்
🔹தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)
🔹சென்னை பூக்கடை மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர்
🔹போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (NIB-CID) ஏடிஜிபி
🔹மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI)-யில் 10 ஆண்டுகள் முக்கியப் புலனாய்வுப் பணி
🔹சிபிசிஐடி (CBCID) பிரிவில் முக்கிய பொறுப்புகள்
🔹எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் தமிழக ஆயுதப்படை டிஜிபி
சிறப்பான காவல் பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதலமைச்சர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) பரிந்துரைத்த மூன்று அதிகாரிகள் கொண்ட பட்டியலில் இருந்து, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் மிகுந்த அனுபவம் மற்றும் திறமையை கருத்தில் கொண்டு மகேஷ் குமார் அகர்வால் மாநிலத்தின் புதிய முழுநேர காவல்துறைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.