
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜியும், முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், கட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்கி தலைவர் திருமாவளவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் உருவானதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்டது. இதனை திருமாவளவன் தானும் முன்பு அளித்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பனையூர் பாபு உள்ளிட்டோர் உடனடியாக திருமாவளவனை சந்திக்காததும் பேசுபொருளானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னரே அவர்கள் விசிக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அதன் பின்னரே அவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், கட்சிக்குள் இவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆளூர் ஷாநவாஸ், முதன்மைச் செயலாளராக உயர்த்தப்பட்டுள்ளார். அதேபோல், எஸ்.எஸ்.பாலாஜி கட்சியின் மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.