
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் அறிவித்துள்ளார். முன்னதாக, இது ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வழங்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புகளில் சுமார் 1.08 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
2026-2027 கல்வியாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக் இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2.23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் ஜூன் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஜூன் 29-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தரவரிசை பட்டியல் வெளியீட்டு தேதி ஜூலை 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் ஜூன் 21 முதல் படிப்படியாக வெளியிடப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 1-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதே நாளில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய ஜூலை 1 முதல் 5 வரை கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (TFC) அணுகலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.