ஹூஸ்டனில் போர்ச்சுகல் அணி 5-0 அபார வெற்றி – ரொனால்டோவின் இரட்டை கோல்கள், வரலாற்று சாதனைகள் பதிவு

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று நடைபெற்ற ‘கே’ பிரிவு லீக் கால்பந்து போட்டியில் உலக தரவரிசையில் ‘நம்பர்-5’ இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணி, உஸ்பெகிஸ்தான் (50) அணியை எதிர்கொண்டது. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

போட்டியின் 6வது நிமிடத்தில், சக வீரர் ஜோயாவோ கேன்செலோ வழங்கிய பந்தை பெற்ற கிறிஸ்டினோ ரொனால்டோ நேரடியாக கோலாக மாற்றி தொடக்க வெற்றியை ஏற்படுத்தினார். 11வது நிமிடத்தில் நுனோ மெண்டஸ் ஒரு கோல் அடித்து முன்னிலை அதிகரித்தார்.

30வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் கனியேவ் அடித்த கோல் ஆப்-சைடு காரணமாக நிராகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்திய ரொனால்டோ, புருனோ பெர்ணாண்டஸ் வழங்கிய உதவியுடன் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

58வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் நெமடோவ் தடுத்து, அவரது ஹாட்ரிக் வாய்ப்பு தவறியது. 60வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பில், புருனோ பெர்ணாண்டஸ் அடித்த பந்து கோல் கீப்பர் கையில் பட்டு வலைக்குள் சென்றதால் ‘சேம் சைடு கோல்’ ஆக பதிவானது.

87வது நிமிடத்தில் ரபேல் லியாவோ மேலும் ஒரு கோல் அடித்து போர்ச்சுகலின் வெற்றியை உறுதி செய்தார்.

ரொனால்டோவின் வரலாற்று சாதனைகள் கிறிஸ்டினோ ரொனால்டோ 2006 உலகக் கோப்பையில் அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து ஆறு உலகக் கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்கள் (10) அடித்த வீரராகவும் அவர் முன்னேறியுள்ளார். இதற்கு முன் யூசெபியோ 9 கோல்களுடன் முன்னிலை வகித்தார்.

41 வயது 138 நாட்களில் கோல் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிக வயதில் கோல் அடித்த வீரராகவும் ரொனால்டோ பதிவானார். முதலிடத்தில் கேமரூனின் ரோஜர் மில்லா உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *