
சென்னை, அக். 9:
உலகப் பார்வைத்திறன் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே கண்தானத்தின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக பணி குழு (SWOTT) மற்றும் வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனை இணைந்து பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் சமூகநல நிகழ்ச்சியை நடத்தின.
இந்நிகழ்ச்சிக்கு SWOTT சமூகத் தொண்டு தன்னார்வ அமைப்பின் நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலரான டாக்டர் எஸ். தமீம் அன்சாரி (சமீர்) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
09.10.2026 அன்று காலை 9.30 மணியளவில், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி உற்சாகமாகத் தொடங்கியது.
பேரணியானது பழைய வண்ணாரப்பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, அங்குள்ள வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், “கண்தானம் செய்வோம்; பார்வையற்றோருக்கு ஒளி கொடுப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இதன் மூலம் கண்தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் எளிதாகக் கண்தானம் செய்ய முன்வரும் வகையில், நிகழ்ச்சியில் பிரத்யேக QR குறியீடும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களது கண்களைத் தானம் செய்வதற்கான பதிவை மேற்கொள்ள முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கண்தானம் மூலம் ஒருவர் மறைந்த பின்னரும் மற்றொருவரின் வாழ்க்கையில் பார்வை ஒளியை ஏற்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட SWOTT சமூகத் தொண்டு தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர் சமீர் அவர்களை, வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரேச்சல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் விஜயன் ஆகியோர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.