
சென்னை, செப். 7 :
காவலர் தினத்தை முன்னிட்டு, சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டம் சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (செப். 6) நடைபெற்றது.
சென்னை சென்ட்ரல் அலைட் பாயிண்டில் நடைபெற்ற இந்த பேரணியை, வடக்கு போக்குவரத்து மாவட்ட துணை ஆணையர் பாலாஜி, இ.கா.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பூக்கடை போக்குவரத்து உட்கோட்ட உதவி காவல் ஆணையர் பாலசுப்பிரமணியன், பூக்கடை போக்குவரத்து உட்கோட்ட புலனாய்வுப் பிரிவு உதவி காவல் ஆணையர் விவேகானந்தன் மற்றும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் துணைப்பிரிவுகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல் அலைட் பாயிண்டில் இருந்து புறப்பட்ட பேரணி, முத்துசாமி பாயிண்ட், ஆர்.ஏ. மன்றம், பாரிஸ் கார்னர் (குரளகம்) வழியாகச் சென்று, மீண்டும் ஆர்.ஏ. மன்றம் வழியாக பயணித்து, தொடங்கிய இடமான சென்ட்ரல் அலைட் பாயிண்டை வந்தடைந்து நிறைவடைந்தது.
பேரணியில் பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தலைக்கவசம் அணிந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிதல், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியின் நிறைவில், தலைமை விருந்தினர்கள் முன்னிலையில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காவலர் தின விழா சிறப்பாக நிறைவடைந்தது.