
பொழிச்சலூர், செப். 3:
தமிழக நகர்ப்புறங்களில் உள்ள நியாய விலை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் தீப்பாஞ்சியம்மன் கோயில் தெருவில் உள்ள காஞ்சி மக்கள் அங்காடி நியாய விலை கடை எண்-05 (02PD153SK)-ல் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு ரசீதுடன் வழங்கப்பட்டது.
பொழிச்சலூரில் நியாய விலை கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வெங்காயம் வாங்கிச் சென்றனர். குடும்ப அட்டை சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்கப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், நியாய விலை கடையில் ரூ.35-க்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த மானிய விலை விற்பனை பெரிதும் உதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததுடன், திட்டத்தை வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், இதேபோன்று அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களையும் மானிய விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.