இந்துஸ்தான் கல்லூரியில் ஆசிரியர் தின விழா – புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் த.உத்திரா வரவேற்றுப் பேசினார். ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்திற்கு வழிகாட்டிகளாகத் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

கல்லூரி இயக்குநர் சூசன் வர்கீஸ் பேசுகையில், இந்துஸ்தான் கல்லூரி கடந்த 30 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றி வருவதாகவும், சென்னைப் பல்கலைக்கழகத் தரவரிசையில் கல்லூரி மாணவர்களின் சாதனைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பள்ளிக்கரணை காவல் மாவட்ட உதவி ஆணையர் எஸ்.ஜான் விக்டர், ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை; மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகவும் திகழ்கின்றனர் என்றார். தொடர்ந்து, அவரது தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழாவில் கல்லூரியின் 30-ஆம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. சிறப்பாக கல்விப் பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள், கல்லூரியில் நீண்டகாலம் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் மா.டேவிட் ரயன், வி.ஜே.பிலிப், துணை முதல்வர் எல்.கிருஷ்ணசாமி, புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் க.மலர்விழி நன்றியுரை ஆற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *