
பாலவாக்கம், ஆக. 30–
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், பாலவாக்கம் கிளை சார்பில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
பாலவாக்கம் அண்ணா சாலை, KVB வங்கி அருகே நடைபெற்ற இந்த முகாமில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 36 பேர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
முகாமில் ரத்ததானம் செய்ய வந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டனர். தகுதி பெற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பான முறையில் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
விபத்துகள், அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கு ரத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ரத்ததானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த முகாம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக அரசின் ரத்ததான கொடையாளர்கள் பட்டியலில் கடந்த 12 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பதாகவும் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளைகள் மூலம் இதுவரை நடைபெற்ற ரத்ததான நிகழ்ச்சிகளில், திருப்போரூரில் 26 பேர், மேடவாக்கத்தில் 50 பேர், பெருங்குடியில் 33 பேர், பனையூரில் 30 பேர், கடப்பாக்கத்தில் 22 பேர், கல்பாக்கத்தில் 43 பேர், செம்மஞ்சேரியில் 38 பேர், கானத்தூரில் 46 பேர், பாலவாக்கத்தில் 36 பேர் என மொத்தம் 324 பேர் ரத்ததானம் செய்துள்ளனர்.
*“ரத்ததானம் செய்வோம்; உயிரைக் காப்போம்”* என்ற மனிதநேய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த முகாம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூக சேவையில் தன்னார்வலர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.