
ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து நடத்திய இந்தச் சோதனை ஓட்டம், உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்த ஏர்பஸ் A350-1000ULR விமானம் தரையிறங்காமல் மெல்போர்னில் இருந்து புறப்பட்டு பசிபிக் பெருங்கடல் மற்றும் வட அமெரிக்கா வான்வழியாக மொத்தம் 23,075 கிலோமீட்டர் தூரத்தைக் தரையிறங்காமல் கடந்து தொடர்ந்து 24 மணி நேரம் 24 நிமிடங்கள் காற்றில் பறந்து பிரான்சின் டூலூஸ் நகரில் உள்ள ஏர்பஸ் உற்பத்தித் தொழிற்சாலையில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
இந்த வரலாற்றுப் பயணத்தை Flightradar24 தளத்தில் 36 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரலையாகக் கண்காணித்தனர்.
இது அந்தத் தளத்தின் வரலாற்றில் இரண்டாவது மிக அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட விமானப் பயணமாகும்.
ப்ராஜெக்ட் சன்ரைஸ் (Project Sunrise) இந்தச் சோதனை ஓட்டம் குவாண்டாஸ் நிறுவனத்தின் ப்ராஜெக்ட் சன்ரைஸ் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு எங்கும் நிற்காமல் (Non-stop) நேரடி விமானச் சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த அல்ட்ரா-லாங்-ரேன்ஜ் (ULR) விமானத்தில் கூடுதலாக 20,000 லிட்டர் எரிபொருள் நிரப்பும் வகையில் பிரத்யேக எரிபொருள் தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
20 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிக்கும் பயணிகளின் சோர்வைக் குறைப்பதற்காக, இதில் வெறும் 238 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வெடுக்க ‘வெல்பிங் ஜோன்’ (Wellbeing Zone) வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நீண்ட தூர வணிக ரீதியிலான நேரடி விமானச் சேவைகள் 2027 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.