
சென்னை, ஜூலை 8:
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அரசின் முக்கிய சிறப்புத் திட்டங்கள் மக்களிடம் விரைவாகவும், முழுமையாகவும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் முன்னேற்றப் பணிகள், திட்ட அமலாக்க நிலை, மாவட்ட வாரியான செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களும் மதிப்பீடு செய்யப்பட்டன. அனைத்து நலத்திட்டங்களும் வெளிப்படைத்தன்மையுடனும், காலதாமதமின்றியும், தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான வாய்ப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் மூத்த அதிகாரிகள், துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, துறைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.