
சென்னை, ஜூன் 22:
சென்னை இராமாபுரத்தில் இயங்கி வரும் உசைனி உயர்நிலைப் பள்ளியில், தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான வீரவேல் மற்றும் அவரது குழுவினரின் சார்பில் மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கட்கிழமை (ஜூன் 22, 2026) காலை 10 மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் பண்ணீர் செல்வம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் K.M.முஹம்மது உமர் அவர்கள் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, ஆவடி எல்லைக்குட்பட்ட மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சந்திரசேகர் அவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
பின்னர் உரையாற்றிய துணை ஆணையாளர் சந்திரசேகர், சாலை பாதுகாப்பின் அவசியம், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் சமூகத்தில் விழிப்புணர்வு தூதர்களாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, SRMC காவல் துணை ஆய்வாளர் பழனிவேல் அவர்கள் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
திரைப்பட இயக்குநரும் நடிகருமான வீரவேல் அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றுகையில், “108 ஆம்புலன்ஸ் கத்துவது நான் இல்லை; உள்ளே துடிக்கும் உயிர்” என்ற உணர்வுப்பூர்வமான கருத்தை வலியுறுத்தி, அவசர கால மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும், 108 ஆம்புலன்ஸ் சேவையின் நோக்கத்தை விளக்கும்போது, “1 – உயிரைக் காக்க வேண்டும், 0 – கட்டணம் இல்லை, 8 – எட்டுத் திசைகளிலும் சேவை” என்ற எளிய விளக்கத்தின் மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் 154-ஆவது வார்டு வட்ட செயலாளர் யுவராஜ் அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டதுடன், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இறுதியாக, பள்ளியின் வரலாற்றுப் பட்டதாரி ஆசிரியர் சோ.ராம்கி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய PUBLIC PICTURES – 2025 அமைப்பினருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.