சேமிப்புக் கிடங்கு பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் மழையில் சேதம்; சன்னரக அரிசி விலை உயர்வு

சென்னை, ஜூன் 21:

தமிழகம் முழுவதும் போதிய சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டு மழையில் நனைந்து வீணாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதனிடையே, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்திருப்பதால், தமிழகத்தில் சன்னரக அரிசியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் ‘மோட்டா’ ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை அரிசிதான் அரசின் பொது விநியோகத் திட்டத்திற்காக அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேவேளையில், சன்னரக நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி குறைவாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தின் ஆண்டு அரிசித் தேவை சுமார் 91 லட்சம் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 75 லட்சம் டன் மட்டுமே மாநிலத்தில் உற்பத்தியாகிறது. மேலும், சுமார் 5 லட்சம் டன் அரிசி கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், மாநிலத்தில் ஆண்டுதோறும் 21 லட்சம் டன் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டில் கர்நாடகாவின் பல பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் சன்னரக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கான அரிசி மற்றும் நெல் வரத்து குறைந்திருப்பதுடன், கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சன்னரக அரிசி மூட்டையின் கொள்முதல் விலை ரூ.1,250 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.3 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ள நிலையில், சில்லறை விற்பனை சந்தையில் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரிசி விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட செலவினங்களில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில், நெல் சேமிப்பிற்கான கூடுதல் கிடங்குகள் அமைத்து விவசாயிகளின் விளைபொருட்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *