திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவலர் தினத்தையொட்டி போக்குவரத்து போலீசார் ஏற்பாடு — வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்கள் வழங்கல்

சென்னை, செப். 6– தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாட்டின் நவீன காவல்துறை அமைப்புக்கு அடித்தளமிட்ட மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம், 1859 நடைமுறைக்கு வந்த செப்டம்பர் 6-ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் முத்துக்குமார், தியாகராய நகர் உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் கஜேந்திரன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அடையாறு மாவட்ட காவல் ஆய்வாளர்கள் கதிர்காமன், விஜயலட்சுமி, செமினா, அசோகன், முருகன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், உதவி ஆய்வாளர்கள் சசிக்குமார், பிரபாகரன், பரமசிவம் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து பேரணியை நடத்தினர்.

திருவான்மியூர் சந்திப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பது, பாதுகாப்பான வேகத்தில் பயணிப்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, காவலர் தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

போக்குவரத்து காவல்துறையினரின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், காவல்துறையினரின் மக்கள் நலப்பணிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *