
சென்னை, ஜூன் 11:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயின்று, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம் ஊக்கத்தொகை இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 2,090 பேர் பயனடைந்துள்ளனர்.
இதில் அதிக மதிப்பெண் பெற்ற 1,085 மாணவ, மாணவிகளும், அவர்களின் கல்வி சாதனைக்கு உறுதுணையாக இருந்த 1,005 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அடங்குவர். மொத்தமாக ரூ.72.03 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 293 மாணவர்களுக்கு தலா ரூ.1,500 வழங்கப்பட்டது. மேலும், பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் (செண்டம்) பெற்ற 30 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதேபோல், 100 சதவீத தேர்ச்சி பெறச் செய்த 391 ஆசிரியர்களுக்கும், செண்டம் பெற வழிகாட்டிய 30 ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 749 மாணவர்களுக்கு தலா ரூ.1,500 வழங்கப்பட்டது. பாடவாரியாக செண்டம் பெற்ற 13 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், 100 சதவீத தேர்ச்சி பெறச் செய்த 513 ஆசிரியர்களுக்கும், செண்டம் பெறச் செய்த 13 ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், அவர்களை கல்வியில் மேலும் ஊக்குவிக்கவும் இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.