
சென்னை, ஆக. 1:
பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR) சார்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் (PROs) பணி ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை (01.08.2026) நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் திறம்பட கொண்டு சேர்ப்பதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பங்களிப்பு, மாவட்ட அளவிலான செயல்பாடுகள், செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அரசின் கொள்கை முடிவுகள், சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம் பொதுமக்களிடம் விரைவாகவும், பயனுள்ள வகையிலும் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அறிவுறுத்தினார். அதேபோல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களின் (DIPR) செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் வி.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் அ.அருண் தம்புராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.