
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற அறிவிப்பு பலகையை வைப்பது கட்டாயம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக அனைத்து அரசுத் துறைகளுக்கும் இதற்கான ஒருங்கிணைந்த புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” (Bribing and accepting bribe is an offense) என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணும் இந்த பலகையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களிலும் இந்தத் தகவல்களை வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையின் இணைய இணைப்பை (Link) வழங்க வேண்டும்.
இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுப் பிரிவுகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும்.
அனைத்துத் துறைகளும் இந்த உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தியதற்கான பணி நிறைவு அறிக்கையை (Compliance Report) மனிதவள மேலாண்மைத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன், ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க லஞ்ச ஒழிப்புத்துறையின் முகவரி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*லஞ்சப் புகார்களைத் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்கள்!*
* வாட்ஸ்அப் எண்: 9498180936
* தொலைபேசி எண்: 044 – 22321090
* மின்னஞ்சல் முகவரி: DVAC@NIC.IN