
சென்னை ஜூலை 29
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் (ஜூலை 29, 2026) சென்னை மெட்ரோ ரயிலில் திடீர் பயணம் மேற்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) செயல்பாடுகள் மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பிற்பகல் வந்த முதல்வர் சொந்தமாக டிக்கெட் எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயிலில் ஏறினார்.
அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் மெட்ரோ நிலையம் வரை ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர் அங்குள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்றார்.
நந்தனம் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட முதலமைச்சர்
மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
மேலும் நந்தனத்தில் இருந்து சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா சென்ற முதலமைச்சர் அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கிண்டி மெட்ரோ பகுதியில் அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர்.
இன்றைய இந்த நேரடி ஆய்வின் போது, மெட்ரோ ரயில் நிலையங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.