அமெரிக்கா – வெனிசுலா இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் விமான சேவை!

அமெரிக்கா – வெனிசுலா நாடுகளுக்கிடையே ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான என்வாய் ஏர் (Envoy Air) மூலம் மியாமி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெனிசுலா தலைநகர் காரகாஸில் உள்ள சிமோன் பொலிவர் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக நிலவிய அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், 2019ஆம் ஆண்டு முதல் நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், மியாமியில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் காரகாஸில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட முதல் நேரடி சேவையாகும்.

தற்போது தினசரி ஒரு விமான சேவை இயக்கப்பட்டு வருவதுடன், மே 21ஆம் தேதி முதல் இரண்டாவது தினசரி சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் முன்னேற்றத்தைக் காட்டுவதோடு, பொருளாதாரம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *